இந்திய ரயில்வேயின் தூய்மைப் பணிகள் குறித்த நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. சீல்டா-அஜ்மீர் அதிவிரைவு ரயிலில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், ரயிலின் கதவருகே நின்றுகொண்டு மிகச் சாதாரணமாக குப்பைகளை தண்டவாளத்தில் வீசியெறிந்துள்ளார்.

இந்த அராஜகச் செயலை திவ்யா கண்டோத்ரா டாண்டன் என்பவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்து, “இந்தியாவில் தூய்மை என்பது கொள்கை அளவில் மட்டுமே உள்ளது, செயல்பாட்டில் இல்லை” எனச் சாடியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், பொது இடங்களைப் பராமரிக்க வேண்டியவர்களே இப்படி நாட்டை குப்பைத் தொட்டியாக கருதினால் சாதாரண மக்கள் என்ன செய்வார்கள் என ஆவேசமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது போன்ற செயல்களில் ஈடுபடும் ஊழியர்கள் மீது வெறும் இடமாற்றம் அல்லது எச்சரிக்கை போன்ற கண்துடைப்பு நடவடிக்கைகள் எடுக்காமல், கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. தூய்மை பாரதம் போன்ற திட்டங்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் பொறுப்பற்ற முறையில் நடக்கும் இத்தகைய சம்பவங்கள் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.