உத்தரப் பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில், கர்ப்பிணி பெண் ஒருவரை மருத்துவமனைக்கு மாட்டு வண்டியில் கொண்டு செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவியது. இதை சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பகிர்ந்து, பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார். “பாஜக ஆட்சியில் ஆம்புலன்ஸ்கள் ‘மாட்டு ஆம்புலன்ஸ்’ ஆகிவிட்டன. டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மாட்டு வண்டியில் ஓடுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

பர்சத்வா டேரா கௌ காட் சன்னி கிராமத்தில் வசிக்கும் அந்தப் பெண்ணை, 7 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிசோலர் சமூக சுகாதார நிலையத்துக்கு மாட்டு வண்டியில் கொண்டு சென்றனர். ஆம்புலன்ஸ் வந்தாலும் சேறும் சகதியும் நிறைந்த சாலையில் சிக்கிக் கொண்டதால், மூன்று மணி நேரம் பயணித்து மருத்துவமனை சென்றடைந்தனர். மருத்துவர்கள் சிகிச்சை அளித்து, பிரசவம் இன்னும் இரண்டு நாட்களில் என்று கூறி அனுப்பினர்.

கிராம மக்கள் மழைக்காலத்தில் இதுபோன்ற கஷ்டங்களை அடிக்கடி சந்திப்பதாகக் கூறுகின்றனர். சாலை இல்லாததால் நோயாளிகளை தோளில் சுமந்தோ அல்லது மாட்டு வண்டியிலோ கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. கடந்த ஆண்டு மார்ச்சில் ஆறு நாள் போராட்டம் நடத்தியும் சாலை அமைக்கப்படவில்லை. அதிகாரிகள், மழை நின்றதும் சிமெண்ட் சாலை போடப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.