ஐபிஎல் 2026 தொடரின் 14-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், குஜராத் வீரர் கிளென் பிலிப்ஸின் அபாரமான ஃபீல்டிங் முயற்சி மற்றும் கடைசி பந்து வரை நீடித்த பரபரப்பு ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
நவீன கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஃபீல்டர்களில் ஒருவராகக் கருதப்படும் நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ், இந்தப் போட்டியின் 6-வது ஓவரில் ஒரு அசாத்தியமான முயற்சியை மேற்கொண்டார். அசோக் சர்மா வீசிய பந்தை டெல்லி வீரர் கே.எல்.ராகுல் தூக்கி அடிக்க முயன்றார். ஆனால், பந்து மட்டையின் விளிம்பில் பட்டு உயரே சென்றது.
யாரும் பிடிக்க முடியாத தூரத்தில் விழுந்திருக்க வேண்டிய அந்தப் பந்தை நோக்கி, உள் வட்டத்தில் நின்றிருந்த பிலிப்ஸ் பின்னோக்கி மின்னல் வேகத்தில் ஓடினார். பந்து தரையைத் தொடும் தருணத்தில், காற்றில் கிடைமட்டமாகப் பாய்ந்து அவர் மேற்கொண்ட முயற்சி வர்ணனையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. பந்து அவரது விரல் நுனியில் படாமல் சில அங்குலங்களில் நழுவினாலும், அவர் காற்றில் பறந்த விதம் “நூற்றாண்டின் சிறந்த கேட்ச்” முயற்சியாகப் பேசப்படுகிறது.
Glenn Phillips is not normal human🤯
Unbelievable attempt 😳 pic.twitter.com/pn9AjzDIQV
— Jeet (@JeetN25) April 8, 2026
இந்தப் போட்டி ஐபிஎல் வரலாற்றின் ஒரு கிளாசிக் ஆட்டமாக அமைந்தது. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, சுப்மன் கில் (70), ஜோஸ் பட்லர் (52) மற்றும் வாஷிங்டன் சுந்தர் (55) ஆகியோரின் அதிரடி அரைசதங்களால் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது.
211 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு, கே.எல்.ராகுல் (92) மிகச்சிறந்த அடித்தளம் அமைத்தார். இறுதியில் டேவிட் மில்லர் 20 பந்துகளில் 41 ரன்கள் குவித்து வெற்றியை நெருங்கினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட போது, மில்லர் ‘சிங்கிள்’ எடுக்க மறுத்துவிட்டு தானே முடிக்க முயன்றார். ஆனால் கடைசி பந்தில் ரன் ஏதும் எடுக்காத நிலையில், ரன்-அவுட் முறையில் குல்தீப் யாதவ் ஆட்டமிழக்க, குஜராத் டைட்டன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் இந்த சீசனின் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
முன்னதாக, ரஷித் கான் பந்துவீச்சில் டெல்லி கேப்டன் அக்சர் படேலின் கேட்சை கிளென் பிலிப்ஸ் மிகச் சரியாகப் பிடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றியது குறிப்பிடத்தக்கது.
