ஐபிஎல் 2026 தொடரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான ஆட்டம், வெறும் கிரிக்கெட் போட்டியாக மட்டுமின்றி பெரும் உணர்ச்சிப் போராட்டமாக மாறியது. கடைசி பந்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் உடைந்து போய் அழுத காட்சிகள் ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், போட்டி முடிந்த பிறகு மற்ற வீரர்கள் கைகுலுக்கிக் கொண்டிருந்த வேளையில், டேவிட் மில்லர் மட்டும் டிரெஸ்ஸிங் ரூமின் ஒரு மூலையில் அமர்ந்து தலையில் கை வைத்தபடி கண்ணீர் விட்டு அழுவது பதிவாகியுள்ளது. மைதானத்தில் அதிரடிக்கு பெயர் போன “கில்லர் மில்லர்”, அந்தத் தோல்வியின் பாரத்தைத் தாங்க முடியாமல் ஒரு சாமானிய மனிதனாகத் தேம்பி அழுதது பார்ப்பவர் நெஞ்சைக் கனக்கச் செய்தது.
Backing our Tiger, always 🫂💙 pic.twitter.com/pAFouiVmVH
— Delhi Capitals (@DelhiCapitals) April 9, 2026
டெல்லி அணியின் இந்தத் தோல்விக்கு மில்லர் எடுத்த ஒரு முடிவே முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. போட்டியின் கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 2 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது குல்தீப் யாதவ் கொடுத்த ‘சிங்கிள்’ ரன் எடுக்கும் வாய்ப்பை மில்லர் மறுத்தார். கடைசி பந்தில் தானே சிக்சர் அல்லது பவுண்டரி அடித்து வெற்றியைத் தேடித்தரலாம் என அவர் கணக்கு போட்டார்.
ஆனால், பிரசித் கிருஷ்ணா வீசிய ஸ்லோ பவுன்சரை மில்லரால் அடிக்க முடியாமல் போக, பதற்றத்தில் குல்தீப் யாதவ் ரன்-அவுட் ஆனார். இதனால் டெல்லி அணி வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
🎥 𝙍𝙖𝙬 𝙍𝙚𝙖𝙘𝙩𝙞𝙤𝙣𝙨 from a 𝙂𝙖𝙢𝙚 𝙤𝙛 𝙈𝙖𝙧𝙜𝙞𝙣𝙨 🔢
Twists, turns and a rollercoaster of emotions 🎢
Relive the final moments from the thrilling #DCvGT contest 🔁#TATAIPL | #KhelBindaas | @gujarat_titans pic.twitter.com/JQEZiWc3OP
— IndianPremierLeague (@IPL) April 9, 2026
இந்தத் துயரம் மில்லரை அதிகம் பாதித்ததற்கு மற்றொரு காரணமும் உண்டு. ஃபீல்டிங் செய்தபோது மில்லரின் கட்டைவிரலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மேற்கொண்டு விளையாட மாட்டார் என்றே கருதப்பட்டது. ஆனால், அணியின் இக்கட்டான நிலையில் கட்டுப்போடப்பட்ட கையுடன் களமிறங்கிய அவர், 20 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 41 ரன்கள் குவித்து வெற்றியை நெருங்கக் கொண்டு வந்தார். இவ்வளவு போராட்டத்திற்குப் பிறகு, தனது தவறான முடிவால் வெற்றி நழுவியது அவரைத் தகர்த்துவிட்டது.
இந்தத் தோல்வி 2026 ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சந்திக்கும் முதல் தோல்வியாகும். கேப்டன் அக்சர் படேல் மில்லரைத் தேற்றினாலும், டிரெஸ்ஸிங் ரூமில் மில்லர் இருந்த நிலை, டி20 கிரிக்கெட்டில் ஒரு சின்ன தவறு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்குச் சான்றாக அமைந்தது.
