வளைகுடா பிராந்தியத்தில் கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கிய போர், தற்போது 4-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் அணுஆயுதப் போர் அபாயத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் வான்வழித் தாக்குதல்களால் ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் உருக்குலைந்துள்ளன. இருப்பினும், தனது தலைவர்களைப் பறிகொடுத்த ஈரான், இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ பாதுகாப்பு வளையத்தை மீறி ஏவுகணை மற்றும் கொத்துக் குண்டுகளால் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் நகரங்கள் பெருத்த சேதத்தைச் சந்தித்துள்ளன.
ஈரானின் விமானப்படை மற்றும் கடற்படை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், ஈரான் தனது ‘புதிய ஆயுதத்தை’ களம் இறக்கி உலகையே அதிர வைத்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்குச் சொந்தமான டியாகோ கார்சியா (Diego Garcia) ராணுவத் தளத்தை நோக்கி ஈரான் நேற்று இரண்டு ஏவுகணைகளை வீசியது.
ஈரானிலிருந்து சுமார் 4,000 கி.மீ தொலைவில் உள்ள இந்தத் தளத்தை ஈரான் குறிவைத்தது இதுவே முதல்முறை. இதில் ஒரு ஏவுகணை நடுவானில் வெடித்தது; மற்றொரு ஏவுகணையை அமெரிக்க கடற்படை ‘எஸ்.எம்.3’ ரக ஏவுகணை மூலம் தடுத்து அழித்தது. இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஏவுகணை ‘கொரம்சாகர்-4′ (Khorramshahr-4) வகையைச் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. தன்னிடம் 2,000 கி.மீ தூரம் வரை மட்டுமே பாயும் ஏவுகணைகள் இருப்பதாகக் கூறி வந்த ஈரான், தற்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ரகசிய ஆயுதங்களை வைத்திருப்பதை இத்தாக்குதல் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், டியாகோ கார்சியா தாக்குதலுக்கும் தங்களுக்குக் எந்தத் தொடர்பும் இல்லை என ஈரான் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. இது குறித்து ஈரான் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், அமெரிக்கத் தளத்தைக் குறிவைத்ததாகக் கூறப்படுவதில் உண்மையில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஈரானின் இந்த நீண்டதூர ஏவுகணைத் தாக்குதல் முயற்சி அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இதன் விளைவாக, ஈரானுக்குள் தரைவழிப் படைகளை அனுப்பிப் போரிடுவதற்கான (Ground Invasion) சாத்தியக்கூறுகளை அமெரிக்க ராணுவம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
