அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது கடந்த 28-ம் தேதி தொடங்கிய வான்வழித் தாக்குதல் இன்று 23-வது நாளை எட்டியுள்ளது. இதற்குப் பதிலடியாக, ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து தீவிரமான எதிர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்தத் தொடர் மோதலால் அந்தப் பிராந்தியம் முழுவதும் போர் பதற்றம் உச்சத்தை அடைந்துள்ளது.இந்தச் சூழ்நிலையில், ஈரானின் முக்கிய அணுசக்தி மையமான ‘நட்டான்ஸ்’ மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதலால் தற்போது வரை அணுக்கதிர்வீச்சு கசிவு ஏதும் ஏற்படவில்லை என்று ஈரான் அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், அணுசக்தி மையத்தின் மீது தாக்குதல் நடத்தியது சர்வதேச விதிமுறைகளை மீறிய செயல் என்று ஈரான் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

அதே சமயம், இஸ்ரேல் நாட்டுக்குள் ஈரான் ‘கிளஸ்டர்’ ரக ஏவுகணைகளை ஏவி அதிரடித் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலின் ஒரு கிண்டர் கார்டன் பள்ளி உட்பட மொத்தம் 12 இடங்களைக் குறிவைத்து இந்த ஏவுகணைகள் பாய்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இரு தரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவதால், இந்தப் போர் மேலும் பல நாடுகளுக்குப் பரவுமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.