மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு (Energy Security) பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக பிரபல மூலோபாய விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு வல்லுநர் பிரம்மா செல்லானி கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணிந்து இந்தியா எடுத்த முடிவுகள், தற்போது இந்தியாவிற்கே பின்னடைவாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளத்தில் பிரம்மா செல்லானி பதிவிட்டுள்ளதாவது: “வாஷிங்டனின் விதிகளைப் பின்பற்றியதால் இந்தியா மீண்டும் சிக்கலில் மாட்டிக்கொண்டது. கடந்த மாதம் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு, அமெரிக்காவின் வேண்டுகோளின்படி ஈரான் மற்றும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் ஏற்றி வந்த மூன்று கப்பல்களை இந்தியா பறிமுதல் செய்தது. ஆனால், இப்போது கச்சா எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்த, அதே அமெரிக்கா ஈரான் மீதான சில தடைகளை ரகசியமாகத் தளர்த்தியுள்ளது.

2019-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, இந்தியாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் விநியோகஸ்தராக இருந்த ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா முற்றிலுமாக நிறுத்தியது. ஆனால், சீனா அந்தத் தடைகளைப் பொருட்படுத்தாமல் ஈரானிடமிருந்து மலிவு விலையில் எண்ணெயை வாங்கியது. இந்தியாவின் இந்த ‘பணிவு’ நேரடியாகச் சீனாவின் லாபமாக மாறியது.

இப்போது எண்ணெய் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஈரானிடம் எண்ணெய் வாங்க இந்தியா முயல்கிறது. ஆனால், “விற்பனைக்கு எண்ணெய் இல்லை, பழைய தள்ளுபடியும் கிடையாது” என ஈரான் கையை விரித்துவிட்டதாக செல்லானி குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அழுத்தத்தின் காரணமாக கடந்த சில மாதங்களாக ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதையும் இந்தியா குறைத்து வந்தது. ஏப்ரல் 2022-க்குப் பிறகு ரஷ்ய எண்ணெய் இறக்குமதி மிகக் குறைந்த அளவையே எட்டியது. ஆனால், தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டவுடன், கடலில் தேங்கியுள்ள ரஷ்ய எண்ணெயை வாங்க அமெரிக்கா 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.

அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு மாற்று வழிகளை இழந்த இந்தியா, இப்போது தனது எரிசக்தி தேவைக்காகப் போர் பதற்றம் நிலவும் ஹார்முஸ் ஜலசந்தியை அதிகம் நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

மேலும் “சீனா பகிரங்கமாகத் தடைகளை உடைத்து லாபம் ஈட்டுகிறது. ஆனால், இந்தியா வாஷிங்டனின் விதிகளுக்குக் கீழ்ப்படிந்து தனது எரிசக்தி பாதுகாப்பை மீண்டும் மீண்டும் ஆபத்தில் ஆழ்த்துகிறது. தற்போதைய எரிசக்தி நெருக்கடிக்கு, அமெரிக்காவின் விருப்பத்திற்கேற்ப இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை அடிக்கடி மாற்றிக் கொண்டதே முக்கியக் காரணம்” என்று பிரம்மா செல்லானி கடுமையாக விமர்சித்துள்ளார்.