மனிதனின் பற்கள் வெறும் உணவை மெல்லுவதற்கு மட்டுமல்ல, அவை ஒரு மனிதனின் வாழ்நாள் முழுவதையும் பதிவு செய்யும் ‘பிளாக் பாக்ஸ்’ (Black Box) போன்றது என்பதை இத்தாலி நாட்டு விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். இத்தாலியின் பொன்டெகாக்னானோ (Pontecagnano) பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 2,700 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகளின் பற்களை ஆய்வு செய்ததில், இரும்புக்கால (Iron Age) மனிதர்களின் வாழ்க்கை முறை குறித்த அதிரடி தகவல்கள் கிடைத்துள்ளன.
ரோமில் உள்ள சபியென்ஸா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராபர்டோ ஜெர்மானோ தலைமையிலான குழு, 10 பெரியவர்களின் 30 பற்களை நுணுக்கமாக ஆய்வு செய்தது. இதில், அந்த காலத்துக் குழந்தைகள் 1 வயது மற்றும் 4 வயதிற்கு இடைப்பட்ட காலத்தில் கடுமையான உடல் ரீதியான அழுத்தத்தை (Stress) எதிர்கொண்டது தெரியவந்துள்ளது.
மரங்களின் வளையங்களைப் போலவே மனிதப் பற்களின் ‘இனாமல்’ (Enamel) அடுக்குகளும் வளர்கின்றன. ஒரு குழந்தை கடுமையாக நோய்வாய்ப்பட்டாலோ அல்லது ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டாலோ, அந்தப் பாதிப்பு பற்களின் இனாமலில் ஆழமான கோடுகளாகப் பதிவாகிவிடும். இந்த ஆய்வில் 80 சதவீத மாதிரிகளில், குழந்தைகள் தாய்ப்பால் மறக்கடிக்கப்பட்டு மற்ற உணவுகளுக்கு மாறியபோது ஏற்பட்ட தொற்று நோய்களின் அடையாளங்கள் காணப்படுகின்றன.
அக்கால மனிதர்கள் எதை உணவாக உட்கொண்டார்கள் என்ற ரகசியத்தை அவர்களின் பற்களில் படிந்திருந்த ‘பிளேக்’ (Plaque) எனப்படும் கறை படிவம் வெளிப்படுத்தியுள்ளது. இந்த கடினமான படிவத்திற்குள் பின்வரும் தடையங்கள் கிடைத்துள்ளன. அதன்படி தானியங்கள் மற்றும் பீன்ஸ் வகைகள். தாவர நார்ச்சதுக்கள். ஈஸ்ட் (Yeast) படிமங்கள் போன்றவைகள் ஆகும்.
ஈஸ்ட் படிமங்கள் கண்டறியப்பட்டதன் மூலம், அந்த கால மக்கள் புளித்த உணவுகளையோ அல்லது ஆரம்பகால பீர், ஒயின் போன்ற பானங்களையோ அருந்தியிருக்கலாம் என்பது உறுதியாகியுள்ளது. ஆய்வில் பெரும்பாலான பற்களில் தாவர நார்ப்பொருட்கள் சிக்கியிருந்தன. இதன் மூலம், அக்கால மனிதர்கள் பற்களை உணவு உண்பதற்கு மட்டுமல்லாமல், கயிறு திரிப்பதற்கும், கருவிகளைப் பிடிப்பதற்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இத்தாலியில் வர்த்தகமும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் அதிகரிக்கத் தொடங்கிய ‘ஓரியண்டலைசிங்’ காலத்தில் இந்த மனிதர்கள் வாழ்ந்துள்ளனர். சமூகம் வளர்ச்சியடைந்து வெளிநாடுகளுடன் தொடர்பு ஏற்பட்டபோது, புதிய உணவு முறைகளால் நோய்களும் பரவத் தொடங்கியுள்ளதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும், குழந்தைப் பருவத்தில் இவ்வளவு அழுத்தங்களைச் சந்தித்த பிறகும், அவர்கள் பெரியவர்கள் ஆகும் வரை உயிர் பிழைத்திருந்தது அவர்களின் அபாரமான நோய் எதிர்ப்புத் திறனைக் காட்டுகிறது.
