ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், அமெரிக்காவின் அனைத்து திட்டங்களும் தோல்வியடைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் ராணுவ பலத்தை குறைப்பது, கடற்படையை அழிப்பது மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறப்பது போன்ற அமெரிக்காவின் இலக்குகள் எதனையும் அவர்களால் எட்ட முடியவில்லை என்று அவர் கூறினார்.
அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துப் பார்த்தும் பலன் கிடைக்காததால், தற்போது இடைத்தரகர்கள் மூலம் ஈரான் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தத் தூது அனுப்பி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஈரானின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றவும், அங்கு ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்து நாட்டை நிலைகுலையச் செய்யவும் எதிரிகள் முயன்றதாக அவர் குற்றம் சாட்டினார்.
ஈரானை வெனிசுவேலா போன்ற ஒரு மோசமான பொருளாதார நிலைக்குத் தள்ள அவர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோற்றுப்போனதாகக் காலிபாப் உறுதிபடத் தெரிவித்தார். ஈரானின் பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மையைச் சிதைக்க நினைத்தவர்களின் எண்ணம் ஈடேறவில்லை என்பதே அவர் பேச்சின் சாரமாக இருந்தது.
