ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடியுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா தனது கடற்படை மூலம் ஈரானியத் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ள நிலையில், இந்த முற்றுகை முழுமையாக நீக்கப்படும் வரை ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அனைத்துக் கப்பல்களும் ‘பகைமை வாய்ந்தவை’ எனக் கருதப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

மேலும் அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணியப்போவதில்லை என்று தெரிவித்துள்ள ஈரான் அதிபர், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்க இத்தகைய கடுமையான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் சவுதி அரேபியா, ஈராக், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளுக்குக் கொண்டு செல்லப்படும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல் படையின் நேரடிச் சோதனைகளுக்குப் பிறகே கப்பல்கள் அனுமதிக்கப்படும் என்ற புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதால், நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்கள் கடலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையைத் தொடர்ந்தால், ஹார்முஸ் ஜலசந்தியை நிரந்தரமாக மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும், இதன் விளைவாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளது.