திமுக – காங்கிரஸ் இடையேயான கூட்டணி வரும் காலங்களிலும் மிகவும் உறுதியாகத் தொடரும் என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாஜகவினர் தங்களது கூட்டணியைச் சரியாகப் பார்த்துக் கொண்டாலே போதுமானது என்றும், மற்ற கூட்டணிகளைப் பற்றி அவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் விமர்சித்தார்.
மேலும், பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் திமுக – காங்கிரஸ் கூட்டணி, எவ்வித மாற்றமுமின்றி நீண்ட காலத்திற்குப் பலமாக நிலைத்திருக்கும் என்று அவர் ஆணித்தரமாகக் குறிப்பிட்டார். தமிழக இடைக்கால பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய விமர்சனங்களுக்குப் பதிலளித்த கனிமொழி, பட்ஜெட்டில் இளைஞர்களுக்கும் விளையாட்டுத் துறைக்கும் தேவையான பல்வேறு எதிர்காலத் திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறினார்.
இந்த மாநில சுயாட்சி குறித்து எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், மாநில உரிமைகளை அடகு வைத்தவர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும், ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்பதே திமுகவின் அடிப்படை கொள்கை என்றும் சுட்டிக்காட்டினார். அரசியலுக்காக அவையில் இருந்து வெளிநடப்பு செய்வதைத் தவிர்த்து, பட்ஜெட்டை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
