தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் ஊழல் கோட்டை இடிந்து விழும் காலம் தொடங்கிவிட்டதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். குடிநீர் வழங்கல் துறை ஒப்பந்தங்களில் சுமார் 1,020 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் புகாரில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனைச் சுட்டிக்காட்டிய நயினார் நாகேந்திரன், மக்கள் வரிப்பணத்தைச் சுரண்டி கமிஷன் கலாசாரத்தில் ஈடுபடும் இந்த அரசின் வீழ்ச்சிக்கான ‘கவுண்ட்டவுன்’ தொடங்கிவிட்டதாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அரசு வேலைகளை விற்பனை செய்து 888 கோடி ரூபாய் ஊழல் புரிந்ததாக எழுந்துள்ள அடுத்தடுத்த புகார்கள் மீதும் விரைவில் சட்டரீதியான நடவடிக்கைகள் பாயும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் திமுக அமைச்சர்களின் ஒட்டுமொத்த முறைகேடுகளும் நீதிமன்றத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வரும் என்றும், தமிழக மக்கள் இந்த ஊழல் அரசை விரைவில் ஓட ஓட விரட்டியடிப்பார்கள் என்றும் அவர் தனது அறிக்கையில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். அமைச்சருக்கு எதிராக நீதிமன்றம் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
