இயக்குநர் உமாபதி ராமையா இயக்கத்தில், நடிகர் நட்டி நட்ராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டிஎன் 2026’ (TN 2026) திரைப்படம், சமகால அரசியல் சூழலை மிகச்சிறப்பாகப் பேசுகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புகழாரம் சூட்டியுள்ளார். கடந்த 10-ஆம் தேதி வெளியான இந்தப் படத்திற்கு தம்பி ராமையா கதை எழுத, கண்ணன் ரவி தயாரித்துள்ளார். தர்புகா சிவா இசையமைத்துள்ளார். நட்டி நட்ராஜ், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே இதில் நடித்துள்ளனர். அரசியல் நையாண்டி மற்றும் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தைப் பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது, நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழல்கள், நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் சமூக அவலங்களை வெளிப்படையாகப் பேசும் திரைப்படங்கள் அண்மைக்காலமாக மிகவும் குறைந்துவிட்டன. முன்னதாக ‘அமைதிப்படை’ போன்ற அரசியல் படங்களை எடுக்கும்போது நாங்கள் எவ்வளவு நெருக்கடிகளைச் சந்தித்தோம் என்பது எங்களுக்குத் தெரியும்.
இன்றைய அரசியல் சிக்கல்களை மிக நேர்த்தியாகவும், யாரையும் புண்படுத்தாத வகையிலும் இயக்குநர் உமாபதி ராமையா கையாண்டுள்ளார். யாரையும் வேண்டும் என்றே தாக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல், கதையோட்டத்திலேயே மிக இயல்பான நகைச்சுவையுடன் அரசியல் அவலங்களை மக்களுக்குப் புரியும் விதத்தில் திரைக்கதையை அமைத்திருப்பது பாராட்டுக்குரியது.
முக்கிய அரசியல் தலைவரான சீமான் இப்படத்தைப் பாராட்டியிருப்பது படக்குழுவினருக்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. சமூக வலைதளங்களிலும் இப்படத்தின் அரசியல் வசனங்கள் குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், ‘டிஎன் 2026’ கவனம் ஈர்க்கும் ஒரு படைப்பாக மாறியுள்ளது.
