கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐபிஎல் 2026 தொடருக்கான முதற்கட்ட அட்டவணையை பிசிசிஐ (BCCI) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு மார்ச் 28-ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ள தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளன.
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, இப்போதைக்கு முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில், மார்ச் 30-ம் தேதி குவஹாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
குறிப்பாக, இந்த முறை சிஎஸ்கே அணியில் இணைந்துள்ள சஞ்சு சாம்சன், தனது முன்னாள் அணியான ராஜஸ்தானுக்கு எதிராகவே முதல் போட்டியில் களம் காண உள்ளது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 3-ம் தேதி சென்னையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் உள்ளூர் ரசிகர்களைச் சந்திக்கிறது சிஎஸ்கே. மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை தேர்தல் தேதிகளைப் பொறுத்து விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
