இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் அதிரடி புயல் அபிஷேக் சர்மா குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர்களுக்கு இடையே தற்போது ஒரு பெரிய வார்த்தைப் போரே வெடித்துள்ளது.
2026 டி20 உலகக்கோப்பை தொடரின் போது, அபிஷேக் சர்மாவை பேட்டை கண்டபடி சுழற்றுபவர் என்று கிண்டல் செய்த பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிருக்கு, அதே நாட்டைச் சேர்ந்த மற்றொரு முன்னாள் வீரர் பாசித் அலி சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
அபிஷேக் சர்மாவின் ஆட்டத்தைப் பார்த்து பொறாமைப்படாமல், அவரைப் பாராட்டக் கற்றுக்கொள்ளுங்கள் என ஆமிருக்கு அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.
உலகக்கோப்பை தொடரின் ஆரம்பப் போட்டிகளில் அபிஷேக் சர்மா சொதப்பிய போது, “இந்தியா அரையிறுதிக்குக் கூட வராது” என்றும், அபிஷேக் சர்மா ஒரு சாதாரண வீரர் என்றும் ஆமிர் விமர்சித்திருந்தார்.
ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் வெறும் 21 பந்துகளில் 52 ரன்களை விளாசி (ஸ்டிரைக் ரேட் 247.62) இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தார் அபிஷேக். இதைப் சுட்டிக்காட்டிய பாசித் அலி, “அபிஷேக் சர்மா ஒரு கிளாஸ் பிளேயர்; ஃபார்ம் என்பது தற்காலிகமானது, திறமை என்பது நிரந்தரமானது.
அவரைப் போன்ற 2 அல்லது 3 வீரர்கள் பாகிஸ்தான் அணியில் இருந்திருக்கக் கூடாதா என்று நான் ஏங்குகிறேன். தரமான வீரர்களைக் கொச்சைப்படுத்துவதை நிறுத்துங்கள்” என ஆமிரை வறுத்தெடுத்துள்ளார். இந்திய ரசிகர்களின் விமர்சனங்களுக்கு இடையே, சொந்த நாட்டு வீரரே ஆமிரை இப்படிப் பேசியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
