அணைக்கட்டு தொகுதியில் பிரச்சாரப் பயணத்தின் போது, தனது கூட்டத்துக்கு வேண்டுமென்றே இடையூறு செய்ய நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் அனுப்பியதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

“ஆம்புலன்ஸ் அனுப்பி கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்த முயன்றாலும், ஆயிரம் ஆம்புலன்ஸ் வந்தாலும் மக்களின் ஆதரவை மாற்ற முடியாது. மீண்டும் இப்படி நடந்தால் ஓட்டுநரே நோயாளியாக செல்ல வேண்டிய நிலை வரும்,” என்று அவர் மிரட்டும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு எதிராக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்தார். “ஒரு முன்னாள் முதல்வர் மிரட்டும் தொனியில் பேசுவது அநாகரீகமானது. ஆம்புலன்ஸ் வந்ததைக் கூட அரசியல் குற்றச்சாட்டாக மாற்றுவது முறையற்ற செயல்” என அவர் கடுமையாக விமர்சித்தார்.

இந்த விவகாரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தனது மறுப்பை வெளிப்படுத்தி விளக்கம் அளித்துள்ளார். “எடப்பாடி பழனிசாமி கூறியது போல நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டது உண்மையல்ல. அணைக்கட்டு மருத்துவமனைக்கு நோயாளியை ஏற்றிச் செல்வதற்காகவே ஆம்புலன்ஸ் சென்றது.

அரசியல் பிரச்சாரத்திற்கு இடையூறு செய்யும் நோக்கத்தில் அனுப்பப்பட்டதாகச் சொல்வது அடிப்படையற்ற குற்றச்சாட்டு” என்று அவர் தெளிவுபடுத்தினார். இதனால், ஆம்புலன்ஸ் விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.