பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் தலிபான் போராளிகளுக்கும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதன் மூலம், இரு தரப்புகளுக்குமிடையேயான பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கைபர் பக்துன்க்வா மாகாண எல்லைப் பகுதியில் இந்த மோதல் வெடித்ததாக அறியப்படுகிறது. இதன்போது, தலிபான் போராளிகளால் சில பாகிஸ்தான் வீரர்கள் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளன.
அதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் படைகள் ஒரு பாகிஸ்தான் இராணுவ டாங்கியை கைப்பற்றியதாக கூறும் மற்றொரு வீடியோவும் X தளத்தில் வைரலாகியுள்ளது. ‘ஆப்கானிஸ்தான் தலிபான் ஆட்சி’ என்ற கணக்கில் பதிவேற்றப்பட்ட அந்தக் காட்சியில், திறந்த கூரையுடன் ஜீப்பில் ஒருவர் பயணிக்கும் காட்சி காணப்படுகிறது. அந்த நபர் முன்னால் பாகிஸ்தான் கொடிகள் பதிக்கப்பட்ட டாங்கி செல்லும் காட்சியையும் படம்பிடித்துள்ளார்.
#Afghan forces, after a battle at the border, brought a captured #Pakistani tank brought to their base. pic.twitter.com/D7ADVHrofg
— Afghanistan under Taliban rule (@RuleTaliban) October 14, 2025
சோவியத் காலத்தில் தயாரிக்கப்பட்ட டி-55 வகை டாங்கி இது எனவும், சில ஆண்டுகளுக்கு முன்பு செர்பியாவிடமிருந்து பாகிஸ்தான் வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த டாங்கியை தலிபான் போராளிகள் பாகிஸ்தான் இராணுவத்திடமிருந்து கைப்பற்றி ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
வீடியோவில், வாகனத்தை ஓட்டி கொண்டிருந்த நபர், நாங்கள் போரிலிருந்து திரும்பி வருகிறோம். தூசியில் மூழ்கி, சோர்வாக ஒரு பாகிஸ்தான் டாங்கியை கொண்டு வருகிறோம். கடவுளின் அருளால் அனைவரும் கந்தஹாருக்குத் திரும்புகிறோம்,” எனக் கூறியதாகக் கேட்கப்படுகிறது.
எனினும், இந்தக் காட்சிகளின் நம்பகத்தன்மை குறித்து எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை. மேலும், பாகிஸ்தான் படைகளும் தலிபான் டாங்கியை அழித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த பல ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையே நடந்த மிகக் கடுமையான எல்லை மோதலாக பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு சந்தையில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தலிபான் குற்றம் சாட்டியிருந்தது. இதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் பாகிஸ்தான், “போராளிகள் மறைந்திருக்கும் தளங்களை குறிவைத்தோம்” என விளக்கம் அளித்திருந்தாலும், தலிபான் அதனை “அதிகார மீறல்” என கடுமையாக எதிர்த்துள்ளது.
