காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இருநாடுகளின் ராணுவத்தினரும் ஒருவர்மீது ஒருவர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். நான்கு நாட்கள் நீண்ட இந்த மோதலுக்கு பின்னர் இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி பதற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இந்திய ராணுவ நடவடிக்கைகள் குறித்து இயக்குநர் ராஜீவ் காய், “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தார். இதற்கு எதிர்வினையாக பாகிஸ்தான் ராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “இந்திய ராணுவம் பொய் மற்றும் புரளிகளை பரப்பி உண்மையை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. வரலாற்றைத் திரித்து காட்டும் செயல்களில் இந்தியா தொடர்ந்து ஈடுபடுகிறது,” என குற்றம் சாட்டியுள்ளது. மேலும், “இந்திய ராணுவம் உண்மையை விட கற்பனை கதைகளில் ஆர்வம் காட்டுகிறது. எனவே அவர்கள் பாலிவுட் திரைப்படங்களுக்கே கதைகள் எழுதலாம்,” என அந்த அறிக்கையில் கிண்டலாக குறிப்பிடப்பட்டுள்ளது.