UPSC சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராவதற்காக ஐஐடி பட்டதாரி ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, இறுதியில் அதில் தோல்வியடைந்த கதையை சமூக ஊடகங்களில் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். பொதுவாக UPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களின் கதைகளே அதிகம் பேசப்படும் நிலையில், இவர் தனது தோல்வியையும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல்களையும் நேர்மையாகப் பதிவிட்டுள்ளார்.
மேலும் “முயற்சி செய்து தோற்பது பரவாயில்லை, ஆனால் ஒரு கனவுக்காக நம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் பணயம் வைப்பது ஆபத்தானது” என்ற புரிதலோடு அவர் எழுதிய இந்த உருக்கமான பதிவு, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் தற்போதைய நிலையை அப்படியே பிரதிபலித்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனால் வேலையை விட்ட பிறகு ஆரம்பத்தில் இருந்த தீவிரமான அர்ப்பணிப்பு, ஆண்டுகள் செல்லச் செல்ல எப்படி ஒருவித தனிமையாகவும், மன அழுத்தமாகவும் மாறியது என்பதை அந்த பட்டதாரி விவரித்துள்ளார். சமூகத்தில் இருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு, நண்பர்களுடனான தொடர்பை இழந்து, தொடர் தோல்விகளால் சுயமரியாதையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் UPSC போன்ற கடுமையான தேர்வுகளுக்குத் தயாராகும் போது, நம்முடைய முழு வாழ்க்கையையும், மனநலத்தையும் அதற்காக மட்டுமே முடக்கி வைக்கக் கூடாது என்றும், தோல்விகளைத் தாங்கும் மனப்பக்குவமும் மாற்றுத் திட்டமும் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் இந்த வைரல் பதிவு பலருக்கு உணர்த்தியுள்ளது.
