அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில், ஒரு செல்ல நாய் விளையாட்டாக லித்தியம் பேட்டரியை மென்றதன் காரணமாக ஏற்பட்ட தீ விபத்து தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சேப்பல் ஹிலில் நடந்த இந்தச் சம்பவம் செல்லப்பிராணி உரிமையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில், அறையில் கிடந்த லித்தியம் பேட்டரியை நாய் மென்று கொண்டிருப்பதையும், பின்னர் பேட்டரி வெடித்து புகை எழுவதையும் காணலாம்.

அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லை எனத் தெரிகிறது. சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் துண்டிக்கப்பட்டிருந்த பேட்டரியை நாய் விளையாட்டாக எடுத்துச் மென்றதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து மென்றபோது, பேட்டரியின் பாதுகாப்பு அம்சங்கள் சேதமடைந்து, அது தீப்பிடித்து புகை எழுந்தது. சில நொடிகளில் கம்பளமும் தீப்பற்றியதால் சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, தீ வீடு முழுவதும் பரவவில்லை; புகை சேதம் மற்றும் எரிந்த கம்பளம் தவிர வேறு எந்த உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை.

சேப்பல் ஹில் தீயணைப்பு துறை இதுகுறித்து வெளியிட்ட எச்சரிக்கையில், “வீடியோவில் உள்ள பேட்டரி சார்ஜ் செய்யப்பட்டு, பின்னர் துண்டிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது பாதுகாப்பாக வைக்கப்படவில்லை. நாய் அதை எடுத்து மென்று, அதன் பாதுகாப்பு அமைப்பை சேதப்படுத்தியதால் தீ விபத்து  ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, நாய்க்கு காயம் இல்லை,” எனத் தெரிவித்துள்ளது.

இந்தக் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி, லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. அதில், தீ ஏற்பட்டதும் நாய் மற்றும் பூனை இரண்டும் பயந்து ஓடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. மேலும் லித்தியம் பேட்டரிகளை செல்லப்பிராணிகளின் அணுகலில் வைக்காதீர்கள்; அவை மிக ஆபத்தானவை,” என்ற எச்சரிக்கையையும் தீயணைப்புத்துறை  வெளியிட்டுள்ளது.