ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி வேட்டையில், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். ஜம்மு காஷ்மீர் காவல்துறை, இந்திய ராணுவம் மற்றும் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் இணைந்து பில்லாவர் பகுதியில் உள்ள பர்ஹேட்டர் கிராமத்தில் இந்த தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர்.
மேலும் அங்கு மறைந்திருந்த பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கியதை அடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இந்த என்கவுண்டரில், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ‘உஸ்மான்’ என்ற பயங்கரவாதி கொல்லப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட பயங்கரவாதியிடமிருந்து அமெரிக்கத் தயாரிப்பான ‘எம்4’ ரக துப்பாக்கி மற்றும் ஏராளமான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக ஜம்முவின் வனப்பகுதிகளில் பதுங்கியிருந்த இந்த பயங்கரவாதியை பிடிக்க ‘ஆபரேஷன் டிராஷி-I’ ன்ற பெயரில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் குடியரசு தின விழா நெருங்கி வரும் வேளையில், எல்லை தாண்டிய பயங்கரவாத ஊடுருவல்களைத் தடுக்கவும், அமைதியைப் பாதுகாக்கவும் எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பயங்கரவாதிகளைத் தேடும் பணி அந்தப் பகுதியில் இன்னும் தொடர்ந்து வருகிறது.
