பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த 23 வயது இளம் பெண், குடும்பத் தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு ரயில் நிலையம் சென்றுள்ளார். அங்கு அவருக்கு அறிமுகமான ஒரு நபர், வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி அவரை கொல்கத்தா அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால், அங்கு சென்றதும் அந்தப் பெண்ணை வெறும் 25 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு பாலியல் தொழில் கும்பலிடம் அந்த நபர் விற்றுவிட்டார். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண், அங்கு வந்த ஒரு வாடிக்கையாளரின் உதவியோடு தனது சகோதரருக்கு ரகசியமாகத் தகவல் கொடுத்துள்ளார்.
இந்தத் தகவலை அறிந்ததும் பீகார் போலீஸார் மேற்கு வங்கக் காவல்துறையினருடன் இணைந்து தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இஸ்லாம்பூர் பகுதியில் இருந்த ஒரு பாலியல் விடுதியில் அதிரடி சோதனை நடத்தி, அந்தப் பெண்ணைப் பத்திரமாக மீட்டனர். இந்தச் சம்பவத்தில் விடுதியை நடத்தி வந்த 60 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்,
மேலும் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த மற்ற பெண்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றி விற்ற நபரை போலீஸார் தற்போது தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
