இந்தியாவில் ஆன்லைன் மூலமாக வேலை தேடும் லட்சக்கணக்கான இளைஞர்களைக் குறிவைத்து, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பயோமெட்ரிக் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அரங்கேற்றப்படும் ஒரு புதிய ‘ஃபேஸ் தெஃப்ட்’ (Face Theft – முகத்திருட்டு) சைபர் மோசடி குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் (MHA) கீழ் இயங்கும் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) மற்றும் தேசிய சைபர் கிரைம் அனலிட்டிக்ஸ் பிரிவு (NCTAU) ஆகியவை இணைந்து தற்பொழுது ஒரு மாபெரும் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளன.
இந்த அக்மார்க் நூதன மோசடியில், சைபர் குற்றவாளிகள் தங்களைப் பிரபல நிறுவனங்களின் எச்ஆர் (HR) அதிகாரிகள் போலக் காட்டிக்கொண்டு, கவர்ச்சிகரமான வேலை வாய்ப்பு மின்னஞ்சல்கள் மற்றும் போலி இணையதளங்கள் மூலம் வேலை தேடுபவர்களைத் தொடர்பு கொள்கின்றனர். தொடர்ந்து, உங்களது சுயவிவரக் குறிப்பு (Profile) அடுத்த கட்ட ஆன்லைன் இன்டர்வியூவிற்குத் தேர்வாகிவிட்டதாகக் கூறி, ஒரு குறிப்பிட்ட மொபைல் செயலி (App) அல்லது வீடியோ கால் மூலமாகப் பேசுகின்றனர்.
அப்போது டிஜிட்டல் சரிபார்ப்பு என்ற பெயரில், வேட்பாளர்களின் முகத்தை ஸ்கேன் செய்வது, நேரடி வீடியோக்களை ரெக்கார்ட் செய்வது, கண் அசைவுகளைச் சோதிப்பது போன்ற ‘ஃபேசியல் வெரிஃபிகேஷன்’ (Facial Verification) வேலைகளைச் செய்யக் கட்டாயப்படுத்துகின்றனர்.
இவ்வாறு பெறப்படும் லைவ் வீடியோ மற்றும் முக அமைப்புகளைப் பிற்காலத்தில் ‘டீப்ஃபேக்’ (Deepfake) தொழில்நுட்பத்தின் மூலம் முறைகேடாகப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களின் பெயரில் போலி வங்கி கணக்குகளைத் தொடங்குவது, கடன்களை வாங்குவது மற்றும் ஆன்லைன் பண மோசடிகளில் ஈடுபடுவது போன்ற மெகா விபரீதங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்த விவகாரத்தில், பொது மின்னஞ்சல் (Gmail/Yahoo) முகவரிகளில் இருந்து வரும் போலி வேலைவாய்ப்பு அறிவிப்புகளை நம்பி யாரும் தங்களது பயோமெட்ரிக் மற்றும் முகத் தரவுகளைப் பகிர வேண்டாம் என்றும், ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக அதிகாரப்பூர்வ டொமைன்களைச் சரிபார்க்க வேண்டும் என்றும் சைபர் விங் அதிகாரிகள் அக்மார்க் சிம்பிள் டிப்ஸை கொடுத்து மக்களை எச்சரித்துள்ளனர்.
