தமிழக அரசியலில் “ஆட்சியில் பங்கு” என்ற முழக்கத்தைச் முன்வைத்து காங்கிரஸ் தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், “கூட்டணி ஆட்சி என்பது தமிழகத்திற்குச் சரிப்பட்டு வராது” என முதலமைச்சர் ஸ்டாலின் தடாலடியாக மறுத்துள்ளார். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் காங்கிரஸுக்கு 70 தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு எனத் தூண்டில் போட்டுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிகள் குறைக்கப்படலாம் என்ற அச்சத்தில் காங்கிரஸ் தரப்பு இந்த அழுத்தத்தைக் கொடுத்து வருகிறது. கடந்த 70 நாட்களாகப் பேச்சுவார்த்தைக்கு திமுக நேரம் ஒதுக்காததும் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு தனியார் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “திமுக – காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக இருப்பதாகவும், சதி செயல்கள் எடுபடாது” என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். ராகுல் காந்தியைத் தனது சகோதரராகப் பார்ப்பதாக அவர் உருக்கமாகக் கூறினாலும், அதிகாரப் பகிர்வுக்குத் திட்டவட்டமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் தலைவர்கள், “தமிழ்நாடு மட்டும் ஏன் கூட்டணி ஆட்சியை ஏற்காது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். பிப்ரவரி 22-ம் தேதி முதல் கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்க உள்ள நிலையில், இந்த மோதல் கூட்டணி முறிவுக்கு வழிவகுக்குமா அல்லது உடன்பாடு ஏற்படுமா என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.
