அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கிரெய்க் வோக்ட் (61) என்ற நபர், பக்கத்து வீட்டுக்காரருடனான பகையால், செல்லப் பிராணிகளாக வளர்க்கப்பட்ட இரண்டு மயில்களைக் கொன்று சமைத்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பக்கத்து வீட்டுக்காரர் தனது மயில்களுக்கு உணவு கொடுப்பதை நிறுத்தவில்லை என்றால், இன்னும் மயில்களைக் கொல்வேன் என்று அச்சுறுத்தி, ஒரு கடிதத்தை அவரது தபால் பெட்டியில் வைத்துள்ளார். இந்தக் கடிதத்தில், மயில்களின் கழுத்தை அறுத்து, அவற்றை வறுத்து சமைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, பக்கத்து வீட்டுக்காரரின் புகாரின் பேரில் வோக்ட் கைது செய்யப்பட்டார்.

காவல்துறையினர் வோக்ட்டை கைது செய்தபோது, அவர் மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில், “நான் விடுதலை ஆனவுடன், மீதமுள்ள எல்லா மயில்களையும் கொன்றுவிடுவேன்” என்று கூறியுள்ளார். இவர் மீது ஏற்கனவே 40-க்கும் மேற்பட்ட வழக்குகள், பொது இடத்தில் குடிபோதை, போக்குவரத்து விதிமீறல்கள், தாக்குதல் உள்ளிட்டவை உள்ளன. மயில்களைக் கொடூரமாகக் கொன்றதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களுக்குப் பின்னால் உளவியல் பிரச்சினைகள் இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.