அமெரிக்காவின் கோலராடோ மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், ஆன்லைனில் நடந்த காதல் மோசடியில் தனது வாழ்க்கை முழுக்க சேமித்திருந்த ரூ.11.6 கோடி (அமெரிக்க டாலர்களில் $1.4 மில்லியன்) பணத்தை இழந்த பரிதாப சம்பவம் வெளியாகியுள்ளது. அதாவது ஆஷ்லே மேடிசன் என்ற நபர் டேட்டிங் தளத்தில் ஒரு பெண்மணியை சந்தித்துள்ளார்.
அந்த பெண்மணி தனது பெயரை ‘எரின்’ என கூறி, தன்னை தொழில்முனைவோர் மற்றும் கிரிப்டோ நிபுணராகவும், வாரிசுகளுடன் வியாபாரம் நடத்துவதாகவும் கூறி நம்ப வைத்து பேச்சுகளை வாட்ஸ்அப்புக்குள் மாற்றினார். அதன்பின், எரின் தனது சொத்துகள், தொழில்முனைவு வெற்றிகள் மற்றும் கிரிப்டோவிலுள்ள லாபங்களைப் பற்றிய படங்கள், வீடியோக்கள், மற்றும் தரவுகளைக் காட்டி, அவ்வழியாக பணம் முதலீடு செய்ய அழுத்தத் தொடங்கினார்.
காதலும் நம்பிக்கையும் கலந்த அந்த உறவில், நபர் 6 வாரங்களுக்குள் நான்கு முறையில் மொத்தமாக $1.4 மில்லியன் கிரிப்டோகரென்சியாக செலுத்தினார். தனது ஓய்வூதியத் திட்டம் என திட்டமிட்டிருந்த இந்த தொகை, மோசடிக்குள்ளான பின் திரும்பவும் பெற முடியாத நிலைக்கு தள்ளியது.
இச்சம்பவம் தொடர்பாக அவரது சகோதரி போலீசாரிடம் புகார் அளித்ததையடுத்து, இந்த விவகாரம் கோலராடோ மாநில விசாரணை நிறுவனமான சிபிஐ வரை சென்றது. விசாரணையில் இது ஒரு ‘கோல்ட் ஸ்டோரேஜ் வாலெட்’ மூலமாய் நடைபெற்ற மோசடி என தெரியவந்தது. இது ஆன்லைனில் செயல்படும், ஆனால் யாருடையது என்பது தெரியாத வாலெட்டாகும்.
நம்பிக்கையை ஆயுதமாகக் கொண்டு பணத்தை பறிக்கும் இந்த மாதிரியான ஆன்லைன் காதல் மற்றும் முதலீட்டு மோசடிகளை மக்கள் முற்றிலும் எச்சரிக்கையாக அணுக வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
