மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, கல்லூரி மாணவியின் மரணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு, மாணவி அருகிலுள்ள ஓட்டலில் இருந்து சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட 10 நிமிடங்களுக்குள் மாணவிக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. உடல்நிலை மோசமடைந்ததால், அவரை உறவினர்கள் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும், மாணவி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். “மாணவிக்கு இதற்கு முன்பு உடல்நல பிரச்சனை எதுவும் இல்லை. சிக்கன் ரைஸ் சாப்பிட்டவுடனே உடல் நிலை பாதிக்கப்பட்டது” என உறவினர்கள் குற்றம் சாட்டினர். சம்பவத்தால் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தகவல் அறிந்து திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி, மாணவியின் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் தொடர்பாக உணவு மாதிரிகள் பரிசோதனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் மரணத்திற்கான காரணம் உறுதி செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
