ஈரோடு மாவட்டம் பெருந்துறை எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மகன் பொன் கார்த்திக்(24). இவர் இன்ஜினியரிங் முடித்து விட்டு திருச்சியில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கார்த்திக் வேலையின் காரணமாக திருச்சியிலே தங்க வேண்டியிருந்தது. இதனால் அவர் ரவி ஆனந்த் என்ற நண்பருடன் திருச்சியில் ஒரு வாடகை வீட்டில் தங்கி வந்துள்ளார்.
தினமும் கார்த்திக் காலையில் வேலைக்கு சென்று மாலையில் தான் வீடு திரும்புவார். ஆனால் நேற்று நீண்ட நேரம் ஆகியும் கார்த்திக் வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவருடன் வேலை பார்க்கும் நண்பர் இளவரசன் கார்த்திக்கை பார்ப்பதற்கு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அறையின் கதவு பூட்டப்பட்டு இருந்ததால் இளவரசன் ஜன்னல் வழியே எட்டி பார்த்துள்ளார்.
அங்கு கார்த்திக் தூக்கில் பிணமாக தொங்கினார். அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளவரசன் என்ன செய்வதென்று தெரியாமல் உடனடியாக போலீசில் புகார் செய்தார் . பின்பு அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கார்த்திக் உடலை மீட்டு பிரேத சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில், அவருக்கு அடிக்கடி ஆன்லைனில் கடன் வாங்கும் பழக்கம் இருந்து வந்தது என தெரிய வந்தது. கடன் தொகையை அவ்வப்போது சிறிது சிறிதாக கட்டிவந்துள்ளார். இருந்தபோதிலும் ஒரு கட்டத்தில் அவரால் கடன் தொகையை செலுத்த முடியவில்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கார்த்திக் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கும் முன்பு கூட் தனது நண்பர் ஒருவரிடம் தனக்கு கடன்களை அதிகமாகி விட்டது என புலம்பி வந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
