உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் மனிதநேயமற்ற முறையில், 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 70 வயது ஓய்வுபெற்ற ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சமூகத்தில் மதிக்கப்பட வேண்டிய ஒரு ஆசிரியரே இத்தகைய இழிசெயலில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ஜெய்தேவ் என்ற அந்த முதியவர், அதே பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமிக்கு சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி ஆசை வார்த்தை காட்டியுள்ளார். சிறுமியைத் தனியாக அழைத்துச் சென்ற அவர், பாழடைந்த ஒரு கட்டிடத்திற்குள் வைத்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இச்செயலை அவர் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சிறுமி பயந்துபோய் யாரிடமும் சொல்லாமல் இருந்த நிலையில், அந்தக் கொடூர வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சிறுமியின் பெற்றோரின் கைக்குக் கிடைத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் கேட்டபோது, நடந்தவற்றை அவர் அழுதுகொண்டே விவரித்தார்.

இச்சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையில், கைதான குற்றவாளி ஜெய்தேவின் சகோதரர் முன்னு என்பவர், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை மிரட்டியுள்ளார். அந்த வீடியோவை நீக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, முக்கியக் குற்றவாளியான ஜெய்தேவை அதிரடியாகக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக இருக்கும் அவரது சகோதரர் முன்னுவைத் தேட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு கல்வி புகட்டும் ஆசிரியர், தனது பேரக் குழந்தை வயதிலான சிறுமியிடம் இப்படி நடந்துகொண்டது மன்னிக்க முடியாத குற்றம். அவருக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.