உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில், சமூக வலைதளத்திற்காக ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்தபோது, தவறுதலாகத் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட 12-ஆம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக உண்மையை மறைத்த அவரது நண்பர்கள் இருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
தர்மசபா இன்டர் கல்லூரியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த அன்ஷ் குமார் ஜா (17), கடந்த மார்ச் 30-ஆம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுத்துள்ளார். அப்போது, கையில் வைத்திருந்த துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்பி ‘ஸ்டைலாக’ போஸ் கொடுக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாகத் துப்பாக்கி வெடித்தது. இதில் தோட்டா அன்ஷின் வயிற்றுப் பகுதியில் பாய்ந்தது. வலியால் துடித்த அன்ஷ், ரத்தப் போக்கை நிறுத்தத் தனது கைகளால் வயிற்றை அழுத்தியபடி சரிந்து விழுந்தார். இந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
 
A disturbing video of a man hit by a bullet during accidental fire has surfaced from Lakhimpur Kheri district of Uttar Pradesh. The victim Ansh Jha was trying to load the pistol while his friends were making reel when the incident took place. pic.twitter.com/uw0RLjcAJS
— Piyush Rai (@Benarasiyaa) April 5, 2026
;
படுகாயமடைந்த அன்ஷை அவரது நண்பர்கள் முதலில் உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அன்ஷின் குடும்பத்தினரிடம், “பட்டாசு வெடித்ததில் அவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது” என்று பொய்யான தகவலைக் கூறி உண்மையை மறைத்துள்ளனர். பின்னர் நிலைமை மோசமானதை அடுத்து, லக்னோவில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு அன்ஷ் மாற்றப்பட்டார். அங்கு எடுக்கப்பட்ட எக்ஸ்-ரே பரிசோதனையில்தான், அவரது வயிற்றில் தோட்டா பாய்ந்திருப்பது தெரியவந்தது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, ஏப்ரல் 2-ஆம் தேதி அன்ஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
சரியான நேரத்தில் துப்பாக்கிச் சூடு குறித்த தகவலை நண்பர்கள் சொல்லியிருந்தால், என் மகனைக் காப்பாற்றியிருக்கலாம் என அன்ஷின் தந்தை புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், கடத்தல், கொலை மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது அன்ஷின் நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ரீல்ஸ் மோகத்தால் ஒரு இளம் மாணவனின் உயிர் பறிபோயிருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், சமூக வலைதளப் பயன்பாடு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
