இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், மைதானங்களுக்குள் விற்கப்படும் குடிநீர் மற்றும் தின்பண்டங்களின் அதீத விலை உயர்வு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர் ஒருவர் எடுத்த வீடியோவில், மைதானத்திற்குள் விற்கப்படும் அடிப்படைத் தேவைகளின் விலைவாசி குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.

வெளியூர்களில் ரூ. 20-க்கு விற்கப்படும் ஒரு பாட்டில் குடிநீர், மைதானத்திற்குள் ரூ. 100-க்கு விற்கப்படுகிறது. அதேபோல், கடைகளில் ரூ. 20-க்கு கிடைக்கும் சிப்ஸ் பாக்கெட்டுகள், மைதானத்தில் ரூ. 60 முதல் ரூ. 70 வரை விற்கப்படுகின்றன.

ஏற்கனவே அதிக விலை கொடுத்து பயணச்சீட்டு  வாங்கி வரும் ரசிகர்களை, இது போன்ற கூடுதல் விலையுள்ள உணவுப் பொருட்கள் மேலும் நிதி நெருக்கடிக்கு உள்ளாக்குவதாக அந்த வீடியோவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, “இது வெளிப்படையான பகற்கொள்ளை” என ரசிகர்கள் பலரும் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். மைதானத்திற்குள் சென்ற பிறகு வேறு வழியின்றி, அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ரசிகர்கள் தள்ளப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

ஐபிஎல் நிர்வாகம் கோடிக்கணக்கில் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களைப் பெற்றாலும், சாதாரண ரசிகர்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் போன்றவற்றிற்கு இவ்வளவு அதிக விலை நிர்ணயம் செய்வது நியாயமற்றது என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த விலை உயர்வைக் கண்டித்து, மைதானத்திற்குள் உணவுப் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், சில ரசிகர்கள் நேரடிப் போட்டிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் அழைப்பு விடுத்து வருகின்றனர். மேலும் ஐபிஎல் போட்டிகள் மெல்ல மெல்ல சாமானியர்களுக்கான விளையாட்டாக இல்லாமல், வசதி படைத்தவர்களுக்கான ஆடம்பரப் பொழுதுபோக்காக மாறி வருகிறதோ என்ற அச்சமும் விளையாட்டு ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.