ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி அணி, தனது தொடர்ச்சியான வெற்றப் பயணத்தைத் தொடர்ந்து வரும் வேளையில், இப்போட்டியின் இடையே நடந்த ஒரு மோதல் சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்சிபி அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, கேப்டன் ரஜத் படிதார் மற்றும் தேவ்தத் படிக்கல் அதிரடியாக விளையாடி 14 ஓவர்களில் 151 ரன்களைக் குவித்திருந்தனர். அப்போது ‘டிரிங்க்ஸ் பிரேக்’ விடப்பட்டது. வழக்கமாக வீரர்களுக்குத் தண்ணீர் மற்றும் ஆலோசனைகளை வழங்க வரும் தினேஷ் கார்த்திக், பயிற்சியாளர் ஆண்டி பிளவருடன் மைதானத்திற்குள் நுழைந்தார்.

 

அடுத்த கட்ட அதிரடி ஆட்டம் குறித்து அவர்கள் வீரர்களுடன் ஆலோசித்துக் கொண்டிருந்தபோது, ரஜத் படிதார் திடீரென நடுவரை நோக்கிச் சைகை காட்டி ஏதோ ஒரு புகாரைக் கூறினார். ரஜத் படிதார் சொன்னதைக் கேட்டதும் ஆத்திரமடைந்த தினேஷ் கார்த்திக்கும், பயிற்சியாளர் ஆண்டி பிளவரும் உடனடியாக நடுவரிடம் சென்று விளக்கம் கேட்டனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. தொலைக்காட்சியில் விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்ட சமயத்தில் இந்தச் சம்பவம் நடந்ததால், நேரலையில் இது முழுமையாகக் காட்டப்படவில்லை. இருப்பினும், தென்னிந்தியத் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் இந்த மோதல் காட்சிகள் பதிவாகி தற்போது வைரலாகி வருகின்றன.

நடுவருடன் எதனால் வாக்குவாதம் ஏற்பட்டது என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்தச் சர்ச்சைக்குப் பிறகு முதல் பந்திலேயே ரஜத் படிதார் ஆட்டமிழந்தாலும், ஆர்சிபியின் அதிரடி குறையவில்லை. களமிறங்கிய டிம் டேவிட் ருத்ரதாண்டவம் ஆடினார். கடைசி 6 ஓவர்களில் மட்டும் ஆர்சிபி அணி 100 ரன்களைக் குவித்து, 20 ஓவர் முடிவில் 250 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. மேலும் களத்தில் நடுவர்களுடன் ஏற்பட்ட மோதல் ஒருபுறம் இருந்தாலும், ஆர்சிபி அணியின் அசுரத்தனமான பேட்டிங் ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது.