உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் 8 வயது சிறுமி கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 24-ம் தேதி மாயமான பிரக்யா என்ற அந்தச் சிறுமியை, அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த சுனில் என்பவன் கடத்திச் சென்றுள்ளான்.

சுமார் 30 மணிநேர தேடுதலுக்குப் பிறகு, சுனிலின் அறையில் இருந்த மாவு கொட்டும் டப்பாவிற்குள் சிறுமியின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதில் கொடுமை என்னவென்றால், சிறுமியைக் கொன்ற பிறகும் ஏதுமறியாதவன் போல அவளது குடும்பத்தினருடன் சேர்ந்து சுனில் தேடுவது போல நாடகமாடியுள்ளான்.

சிறுமி கடைசியாக ஒரு கடையில் சிப்ஸ் வாங்குவது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் காவல்துறை நடத்திய சோதனையில் இந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது. சிறுமியின் உடல் சிதைக்கப்பட்டதைக் கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள், குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை விதிக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தற்போது தலைமறைவாக உள்ள கொலையாளி சுனிலைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.