உண்மையான காதல் என்பது மரணத்திற்குப் பிறகும் வாழும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு முதிய ஆட்டோ ஓட்டுநர். தனது மறைந்த மனைவியின் நினைவாக, அவர் தனது ஆட்டோ முழுவதும் மனைவியின் புகைப்படங்களை ஒட்டி வைத்துள்ளார். மனைவி இறந்து 8 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அவர் மீதான காதல் இன்னும் குறையவில்லை என்பதை இவரது செயல் உணர்த்துகிறது.
ஆசிஷ் மேத்யூ என்ற இன்ஸ்டாகிராம் பயனர் இந்த முதியவருடன் உரையாடிய வீடியோவை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த நெகிழ்ச்சியான கதை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த வீடியோவில், ஆட்டோவின் உட்புறம் முழுவதும் மனைவியின் படங்கள் நிறைந்திருப்பதைக் கண்டு காரணம் கேட்டபோது, அந்த முதியவர் உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் விட்டுள்ளார். இந்த உருக்கமான பதிவு தற்போதும் இணையவாசிகளைப் பெரிதும் கவர்ந்து வருகிறது.
View this post on Instagram
இந்த முதியவருக்கு மகன், மருமகள் மற்றும் ஆறு பேரக்குழந்தைகள் கொண்ட பெரிய குடும்பம் உள்ளது. வயது மூப்பு காரணமாக வீட்டில் ஓய்வெடுக்குமாறு மகன் எவ்வளவோ வற்புறுத்தியும், அவர் தொடர்ந்து ஆட்டோ ஓட்டி வருகிறார்.
வீட்டில் சும்மா இருந்தால் மனைவியின் நினைவுகள் வாட்டுவதாகவும், அதனால் ஏற்படும் மன உளைச்சலைத் தவிர்க்கவே தினமும் ஆட்டோவுடன் வீதிக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இவர் தினமும் காலையில் ஆட்டோவைச் சுத்தம் செய்து, மனைவியின் படங்களுக்குத் புதிய பூக்களைச் சூட்டிவிட்டுத்தான் சவாரிக்குக் கிளம்புவார் என்று அவரது அண்டை வீட்டார் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.
