தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடும் தமிழக முதல்வர் விஜய்யின் நடவடிக்கையை வரவேற்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசனிடம், தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர்,
“டாஸ்மாக் கடைகளை மூடும் இந்த அறிவிப்பு மிகுந்த வரவேற்புக்குரியது. இது குறித்து நீண்ட காலமாகப் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வந்தன. தற்போது அது செயல்பாட்டிற்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நடவடிக்கைக்காக முதல்வருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
திரைத்துறையைச் சேர்ந்த ஒரு பிரபலம், அரசியலுக்கு வந்து முதல்வராக உயர்ந்திருப்பது மற்றும் அவரது செயல்பாடுகள் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த கமல்ஹாசன், அவரை ஒரு திரைப்பட நடிகராக மட்டும் நாம் பார்க்கக் கூடாது. அவருக்குப் பொதுமக்களுக்கான வேறு பல கடமைகளும் பொறுப்புகளும் இருக்கின்றன. ஒருவர் எந்தத் துறையிலிருந்து வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். குறிப்பாக, எங்கள் திரைத்துறையைச் சேர்ந்த ஒருவர் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுச் செயல்படுவது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
திரைத்துறையில் விஜய்யின் சீனியரான கமல்ஹாசன், அவரது அரசியல் பயணத்தையும் நிர்வாக முடிவுகளையும் வெளிப்படையாகப் பாராட்டியிருப்பது அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
