தமிழக உளவுத்துறையின்  புதிய ஐ.ஜி.யாக (Intelligence) அஸ்ரா கர்க் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு  வெளியிட்டுள்ளது.

தேர்தல் நடைமுறைகளை ஒட்டி, ஏற்கனவே உளவுத்துறை ஐ.ஜி.யாக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டிருந்த அவினாஷ்குமார் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, தற்போது வடக்கு மண்டல ஐ.ஜி.யாகப் பணியாற்றி வரும் அஸ்ரா கர்க் அந்தப் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார்.

அஸ்ரா கர்க் 2004-ஆம் ஆண்டு பேட்ச்-ஐச் சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார்.  தமிழக காவல்துறையில் சமரசம் செய்துகொள்ளாத, நேர்மையான அதிகாரி என்ற நற்பெயரைப் பெற்றவர். கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைப்பதற்கு முன்னதாக, தமிழக அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் (SIT) தலைவராக அஸ்ரா கர்க் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நேரத்தில் தமிழக உளவுத்துறையின் மிக முக்கிய பொறுப்புக்கு நேர்மையான அதிகாரி என்று கருதப்படும் அஸ்ரா கர்க் நியமிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்திலும், காவல்துறை வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.