தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள குறுவை பருவ நெல் பயிர்கள் போதிய தண்ணீர் இல்லாமல் கருகத் தொடங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையிலிருந்து குறுவை பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்பது உறுதியான நிலையில், நிலத்தடி நீரை மட்டுமே நம்பி விவசாயிகள் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கரில் நெல் நடவு செய்துள்ளனர்.

ஆனால், கடந்த சில வாரங்களாக காவிரி பாசன மாவட்டங்களில் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால், நீர் இறைப்பான்கள் மூலம் வயல்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன என்றும், வயல்வெளிகள் பாலம் பாலமாக வெடித்துள்ளன என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். ​விதை, நடவு, உரம் மற்றும் களையெடுத்தல் என உழவர்கள் ஏற்கனவே ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவழித்துள்ள நிலையில், பயிர்களைக் காப்பாற்றாவிட்டால் அவர்களுக்குப் பேரிழப்பு ஏற்படும் என அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

பயிர்களைக் காப்பாற்ற தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என்பதைத் தவிர அரசிடம் உழவர்கள் பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை என்றும், அது அரசால் நிறைவேற்ற முடியாத ஒன்றும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் நெற்பயிர்களைக் காப்பாற்ற ஒரு நாளைக்கு குறைந்தது 18 மணி நேரமாவது தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் எனவும், விவசாயிகளுக்கு ரூ.5,000 இடுபொருள் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.