தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை 100% உறுதி செய்யும் நோக்கில், ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ மிக பிரம்மாண்டமாக களம் இறக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடிப் படைக்காக தமிழக அரசு ரூ.357 கோடி நிதியை வாரி வழங்கியுள்ளதுடன், கூடுதலாக 2,500 புதிய பணியிடங்களையும் உருவாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. எங்கெல்லாம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ளது என்பதை முன்கூட்டியே கணித்து, அந்த இடங்களுக்குச் சென்று பாதுகாப்பு வழங்குவதுதான் இந்த படையின் முக்கிய நோக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிங்கப்பெண் அதிரடிப்படை தலைவர் ஐஜி பவானீஸ்வரி விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கையில், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராகக் கை வைக்கும் குற்றவாளிகள் மீது மிகக் கடுமையான ஆக்ஷன் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். தற்போது முதற்கட்டமாக 70 ஸ்பெஷல் டீம்கள் தமிழ்நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, முழு வீச்சில் செயல்படத் தொடங்கியுள்ளன. இனி தமிழ்நாட்டில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் முழு பாதுகாப்பு கிடைக்கும் என்பதால் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
