2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுகவை வீழ்த்த அதிமுக, பாஜக, பாமக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் இணைந்து ‘தேசிய ஜனநாயக கூட்டணியை’ அமைத்துள்ளன. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க மாட்டேன் என்று முன்பு கூறிவந்த டிடிவி தினகரன், தற்போது அந்தப் பிடிவாதத்தைத் தளர்த்தி இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளார்.
மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் விரைவில் தங்களது கூட்டணியில் இணைவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட எடப்பாடி பழனிசாமி, தனக்கும் தினகரனுக்கும் இடையே இருந்த பழைய கருத்து வேறுபாடுகளை இருவரும் மறந்துவிட்டதாகவும், தற்போது தாங்கள் அனைவரும் ‘அம்மாவின் பிள்ளைகளாக’ ஒன்றிணைந்துள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
ஆளும் திமுகவை வீழ்த்துவதே தங்களின் ஒற்றை இலக்கு என்று தெரிவித்த இந்தக் கூட்டணித் தலைவர்கள், தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதிமுக-பாஜக கூட்டணியில் முக்கிய கட்சிகள் இணைந்துவிட்ட சூழலில், ஓபிஎஸ் அவர்களின் வருகைக்காகக் காத்திருப்பதாக தினகரன் கூறியிருப்பது அதிமுக தொண்டர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
