உத்தரபிரதேசம் மாநிலத்தில்  டெஹ்ரா மிலாக் கிராமத்தைச் சேர்ந்த ருச்சி (26) என்ற பெண், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (TGT) தேர்வுக்காக தயாராகி வந்துள்ளார். வியாழக்கிழமை  இரவு உணவிற்குப் பிறகு தனது அறைக்குச் சென்ற ருச்சி, வெள்ளிக்கிழமை காலையில் நீண்ட நேரம் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகப்பட்ட குடும்பத்தினர் ஜன்னல் வழியாக எட்டி  பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, ருச்சியின் கையில் தற்கொலைக் குறிப்பு எழுதப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், “என் மரணத்திற்கு காரணம் அருண். நான் ஒருவருடன் பைக்கில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தபோது  பயணத்தை ரகசியமாக வீடியோ எடுத்தார்.

பின்னர் அதை கிராம மக்களிடம் பகிர்வதாக மிரட்டினார். பலமுறை உடல் உறவுக்கு வற்புறுத்தினார். மறுத்ததால், வீடியோவை வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்தார். என் மீது அனைவரும் அவதூறு பேச தொடங்கினர். மன அழுத்தத்தில் வாழ முடியாமல் தற்கொலை செய்கிறேன்” என்று கூறியிருந்தார்.

“>

 

இந்த விவகாரம் தொடர்பாக ருச்சியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அருண் மற்றும் அவரது சகோதரர் சுஷில் ஆகியோருக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலீசார் இருவரையும் கைது செய்ய விசாரணை நடத்தி வருகின்றனர். ருச்சியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம், சமூக ஊடகங்களில் தவறாக பகிரப்படும் விஷயங்கள் எவ்வளவு பெரிய மன உளைச்சலையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடும் என்பதை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.

பெண்கள் மீதான சைபர் மிரட்டல்களின் தீவிரம், தனியுரிமையின் பாதுகாப்பு மற்றும் சமூகத் தாக்கங்கள் குறித்து புதிய கவலைகளை எழுப்பியுள்ளது.