தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள மியாபூர் பகுதியில் நேற்று நடந்த கோர விபத்தில், பள்ளிப் பேருந்து ஒன்று வேகமாக வந்து பைக் ஓட்டுநரை மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

விபத்தில் உயிரிழந்தவர் டி.என். ராஜு என்பவர், நிஜாம்பேட்டையில் உள்ள மருத்துவமனையிலுள்ள ஆய்வகத்தில் பொறுப்பாளராக பணியாற்றி வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்த மற்றொரு வாகனத்தின் டேஷ்கேமிராவில் பதிவான வீடியோவில், பைக் ஓட்டுநர் சாலை சந்திப்பை நெருங்கும் போதே வலது பக்கத்தில் இருந்து வந்த பள்ளிப் பேருந்து அதிவேகமாக வந்து நேரில் மோதுவது தெளிவாக காணப்படுகிறது. மோதலால் பைக் ஓட்டுநர் சில அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டார்.

பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் விரைந்து இறங்கி காயமடைந்தவரை பார்வையிட்ட காட்சியும் அதில் உள்ளது. பின்னர் பேருந்து ஓட்டுநரும் கீழே இறங்கி சம்பவத்தை பார்வையிட்டார்.

“>

 

இந்த சம்பவம் தொடர்பாக மியாபூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, “பள்ளிப் பேருந்து ஓட்டுநர்கள் வேக வரம்பை கடைபிடித்து பாதுகாப்புடன் வண்டி ஓட்ட வேண்டும்” என தெலுங்கானா போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், பள்ளி நிர்வாகமும், பெற்றோர்களும் ஓட்டுநரின் பழக்கம், அனுபவம் ஆகியவற்றை சோதித்த பின்னரே நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.