எல்பிஜி கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு இன்று (ஜூன் 1) முதல் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் அதிரடி விதிகள் அமலுக்கு வருகின்றன. மத்திய அரசு இயற்கை எரிவாயு (PNG) பயன்பாட்டை நாடு முழுவதும் தீவிரமாக ஊக்குவித்து வரும் நிலையில், தேசிய பிஎன்ஜி இயக்கம் 2.0 ஜூன் 30-டன் நிறைவடைகிறது. இதன் ஒரு பகுதியாக, “ஒரு வீட்டுக்கு ஒரு கனெக்ஷன்” (One Household, One Connection) என்ற அதிரடி கொள்கை இன்று முதல் கட்டாயமாக்கப்படுகிறது.

உங்கள் பகுதியில் பைப்லைன் கேஸ் (PNG) வசதி இருந்து, நீங்கள் கனெக்ஷன் எடுத்திருந்தால், பழைய எல்பிஜி சிலிண்டர் கனெக்ஷனை உடனடியாக ஒப்படைக்க வேண்டும். எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் கணினி தரவுத்தளங்களை ஒருங்கிணைத்துள்ளதால், ஒரே முகவரியில் இரட்டை கனெக்ஷன் வைத்திருப்பவர்களின் சிலிண்டர் சப்ளை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்படவோ அல்லது தானாகவே ரத்து செய்யப்படவோ அதிக வாய்ப்புள்ளது.

​இனி பைப்லைன் கேஸ் ஆக்டிவாக உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் ஆன்லைனில் புதிய சிலிண்டர் புக் செய்யவோ, ரீஃபில் செய்யவோ முடியாது; அந்த முயற்சிகள் தானாகவே முடக்கப்படும். இதுமட்டுமன்றி, சிலிண்டர் பதுக்கலைத் தடுக்க அடுத்த சிலிண்டர் புக் செய்வதற்கான கால அவகாசமும் (Lock-in Period) இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நகர்ப்புற வாசிகள் ஒரு சிலிண்டர் வாங்கிய பிறகு அடுத்த சிலிண்டருக்கு குறைந்தபட்சம் 25 நாட்களும், கிராமப்புற மக்கள் அதிகபட்சமாக 45 நாட்கள் வரையிலும் காத்திருக்க நேரிடும்.

இருப்பினும், ஆண்டுக்கு 12 மானிய விலை சிலிண்டர்கள் வழங்கும் உரிமை தொடரும் என்றும், புதிய எல்பிஜி கனெக்ஷனுக்கான டெபாசிட் கட்டணங்கள் சற்று உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற மக்கள் இப்போதே தாராளமாக தங்கள் பகுதியில் உள்ள பிஎன்ஜி வசதிகளைச் சரிபார்த்து உஷாராவது நல்லது