பெற்ற தாயே தன் சொந்தக் இரத்தம் என்று கூடப் பார்க்காமல் மூன்று பிஞ்சு உயிர்களைக் கொன்றுவிட்டு, தானும் மாய்த்துக் கொண்ட நெஞ்சை உலுக்கும் கோரச் சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
லாரி ஓட்டுநரான கணவர் பிழைப்புக்காக ஹைதராபாத்தில் இருக்க, ஹிர்வா கிராமத்தில் 32 வயதான அனிதா சிங் என்ற பெண் தனது 7, 4 மற்றும் 2 வயது பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
கடும் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படும் அனிதா, நேற்று தன் மூன்று அப்பாவி மகள்களுக்கும் ‘இருமல் மருந்து’ என்று கூறி கொடிய பூச்சிக்கொல்லி விஷத்தைக் கொடுத்துள்ளார்.
குழந்தைகள் துடிதுடிப்பதைக் கண்டும் நெஞ்சம் உருகாமல், வீட்டில் இருந்த உடைகள், முக்கிய ஆவணங்கள், குடும்பப் புகைப்படங்கள் மற்றும் தானிய மூட்டைகளுக்குத் தீ வைத்துவிட்டு, அவரும் அதே விஷத்தைக் குடித்துள்ளார்.
இதற்கிடையே, விஷத்தின் வீரியம் குறைவாக உடலுக்குள் சென்றதால், 7 வயது மூத்த மகள் ரித்திகா மட்டும் தட்டுத்தடுமாறி வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து, “அம்மா மருந்துன்னு ஏதோ கொடுத்தாங்கப்பா..” என்று அழுதுகொண்டே அக்கம்பக்கத்தினரிடம் கூறியது பார்ப்பவர் நெஞ்சைப் பிளப்பதாக இருந்தது.
பதறியடித்துக் கொண்டு ஓடிவந்த கிராம மக்கள், அனைவரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்குத் தூக்கினர். ஆனால், அதற்குள் தாயும் மற்ற இரண்டு பிஞ்சுகளும் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கைவிரித்தனர்.
உயிருக்குப் போராடிய ரித்திகாவும் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள். சாவதற்கு முன்னால் அந்தச் சிறுமி போலீசிடம் கொடுத்த மரண வாக்குமூலம்தான் இந்த ஒட்டுமொத்தப் பயங்கரத்தையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
வறுமையா அல்லது குடும்பத் தகராறா, ஒரு தாயை இந்த அளவுக்குக் கொடூரமான முடிவை எடுக்க வைத்தது எது என்று தெரியாமல், அந்த கிராமமே கண்ணீரில் மூழ்கியுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
