தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு ‘புதிய யதார்த்தம்’ இன்றைய 17-வது சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரங்கேறியுள்ளது.

கடந்த 1967-ல் திமுகவும், 1977-ல் அதிமுகவும் ஆட்சிக்கட்டிலில் ஏறியது முதல், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இரு திராவிடக் கட்சிகளுமே மாறி மாறி ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்து வந்தன. ஆனால், தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அரை நூற்றாண்டு கால அரசியல் மரபு உடைக்கப்பட்டு, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் உறுப்பினர்களும் முதல்முறையாக எதிர்க்கட்சி வரிசையில் அருகருகே அமரும் சூழல் உருவாகியுள்ளது.

அதுமட்டுமின்றி, தமிழக அரசியல் வரலாற்றில் அதிமுக தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதும் இதுவே முதல்முறை என்பதால், இன்றைய சட்டமன்றக் கூட்டத்தொடர் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்த மாற்றமானது தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகவே கருதப்படுகிறது.