தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பாமக குழு தலைவர் சவுமியா அன்புமணி அதிரடியாக உரையாற்றினார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்வதாகக் குற்றம் சாட்டிய அவர், கடந்த ஆட்சியின் வீழ்ச்சிக்கு பாலியல் குற்றங்களே முக்கிய காரணம் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசிலும் அதே நிலை நீடிப்பதாகக் சாடிய சவுமியா, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இனி பொறுக்காமல் பொங்கி எழ வேண்டும் என்றும், அரபு நாடுகளில் வழங்குவதைப் போல இங்கும் கடுமையான தண்டனைகளைத் தர வேண்டும் என்றும் அதிரடி கோரிக்கை விடுத்தார்.

​பெண்கள் பாதுகாப்பு மட்டுமின்றி தருமபுரி மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினையையும் அவர் சட்டமன்றத்தில் பலமாக எதிரொலித்தார். தருமபுரியில் இரண்டு ஆறுகள் ஓடியும் மக்களுக்கு இன்னும் சுகாதாரமான குடிநீர் கிடைக்கவில்லை என்ற கசப்பான உண்மையை உடைத்த சவுமியா அன்புமணி, மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தருமபுரி-காவிரி உபரி நீர் திட்டத்தை அரசு உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என மிக அழுத்தமாக வலியுறுத்தினார்.