அரசு வேலை பறிபோய்விடும் என்ற பயத்தில்ஒரு தம்பதி தங்கள் மூன்று நாட்களே ஆன புதிய பிறந்த சிசுவை காட்டுக்குள் கொண்டு சென்று கல்லின் ஓரத்தில் கைவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் மத்தியப் பிரதேசம் – நந்தன்வாடி பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பப்லு தண்டோலியா எனும் அரசு பள்ளி ஆசிரியருக்கும் அவரது மனைவி ராஜ்குமாரிக்கும் ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருந்தனர். அண்மையில் நான்காவது குழந்தையாக ஆண் சிசு பிறந்தது. ஆனால், இந்த நான்காவது குழந்தையின் பிறப்பு, அவர்களது அரசுப் பணிக்கு தடையாக மாறக்கூடும் என்ற ஆழ்ந்த பயம், அவர்களை இப்படி ஒரு முடிவை எடுக்கச் செய்தது.
2001ஆம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி, ம.பி. அரசு ஊழியர்களுக்கு ‘இரண்டு குழந்தைகள்’ கொள்கை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை மீறுபவர்கள், அரசு பணியிலிருந்து நீக்கப்படுவர் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் காட்டுக்குள் கல்லின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த சிசுவின் அழுகுரலை, காலையில் நடைபயிற்சிக்கு சென்ற கிராம மக்கள் கேட்டனர். பின்னர், குழந்தையைக் கண்டுபிடித்து உடனடியாக போலீசாருக்கும் மருத்துவத்துறைக்கும் தகவல் வழங்கினர்.
இரவு முழுவதும் குளிரிலும், எறும்புகளின் கடியிலும் இருந்த சிசுவின் உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்தன. குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற மருத்துவர்கள், சிகிச்சை அளித்த பின்னர், தற்போது குலநதி பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய தந்தை மற்றும் தாய் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தையை கைவிட்ட பின்னணி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) கணக்குகளின்படி, புதிதாகப் பிறந்த குழந்தைகளை கைவிடும் சம்பவங்களில், மத்தியப் பிரதேசம் நாட்டிலேயே முதலிடத்தில் இருப்பது கவலையளிக்கிறது. சமூக பாதுகாப்பு கொள்கைகளும், குடும்ப திட்டக் கட்டுப்பாடுகளும் மனிதநேயம் குன்றும் முடிவுகளுக்கு வழிவகுக்கக் கூடாது என வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
