விஜயதசமி மற்றும் துர்கை விழாவை முன்னிட்டு, மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் நடந்த துர்கா சிலை கரைப்பு நிகழ்வில் ஏற்பட்ட சோகமான விபத்தில், 11 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
அதாவது விழா முடிந்த பின், பந்தனா பகுதியில் உள்ள ஏரியில் துர்கா சிலைகளை கரைப்பதற்காக, டிராக்டர் டிராலியில் சிலைகள் மற்றும் பக்தர்களுடன் சிலர் புறப்பட்டனர். அந்த டிராலி ஏரியை அணுகும் தருணத்தில், திடீரென சமநிலை இழந்து கவிழ்ந்தது.
இதனால், சிலைகளுடன் இருந்த பக்தர்களும் நேரடியாக நீரில் விழுந்து மூழ்கினர். தகவல் அறிந்தவுடன், போலீசார் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் உள்ளூர் நீச்சல் வீரர்களும் பங்கேற்றனர்.
மீட்பு குழுவினர் தொடர்ந்து நடத்திய நடவடிக்கையில், 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால், 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்களை ஏரியில் இருந்து மீட்டுள்ளனர். மேலும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விபத்துக்கான காரணம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். துர்கா விழா என்ற புனிதநாளில், பக்தர்கள் இறந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் தீவிர சோகத்தைக் கிளப்பியுள்ளது. பலரும் சமூக ஊடகங்கள் மற்றும் ஊடக வாயிலாக தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
