திருவண்ணாமலையில் இன்று வடக்கு மண்டல இளைஞரணி மாநாட்டை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடத்தவுள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, புதிய கட்சியாக உருவாகியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் அவர்களுக்கு இளைஞர்கள் மத்தியில் இருக்கும் ஆதரவைப் பிளக்கும் வகையில் இந்தக் கூட்டத்தை திமுக நடத்துவதாகப் பார்க்கப்படுகிறது.
கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் இதில் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டில் சுமார் 1.3 லட்சம் நிர்வாகிகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இதற்குக் காரணம், சமீபத்தில் திமுகவின் இளைஞரணியில் பூத் கமிட்டி மற்றும் கட்சி அமைப்பு ரீதியாக 5 லட்சம் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதே ஆகும்.
92 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து கிளை மற்றும் வார்டு அளவில் நியமிக்கப்பட்ட இந்த இளைஞர்கள் அனைவரும் மாநாட்டில் திரள உள்ளனர். இதன் மூலம், விஜய்க்கு எதிராக இளைஞர்களின் வாக்குகளைத் தங்கள் பக்கம் திருப்பவும், இளம் தலைமுறையினர் மத்தியில் திமுகவை வலுப்படுத்தவும் திமுக திட்டமிட்டுள்ளது.
தவெக மாவட்ட அளவில் இளைஞர்களைத் திரட்டினால், திமுக தொகுதி வாரியாகக் கட்டமைத்து வருவது அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.
