நடிகர் விஜய் கடந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் (தவெக), வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. இந்தச் சூழலில், தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி, அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் விஜயின் தவெக என நான்கு முனைப் போட்டி நிலவும் நிலை உருவாகியுள்ளது.

பா.ம.க, தே.மு.தி.க, அ.ம.மு.க போன்ற கட்சிகள் இன்னும் தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. இந்த முக்கிய காலகட்டத்தில், தவெக-வின் கொள்கை பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜ் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சியுடன் (பாஜக) எக்காலத்திலும் கூட்டணியோ அல்லது மறைமுக உறவோ கண்டிப்பாக இருக்காது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும், தவெக-வின் தேர்தல் அறிக்கையில் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் அமைக்கப்படும் என்றும், ஏற்றுமதிக்குத் தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு பொதுக்கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், அதிமுக உடனான கூட்டணி குறித்து ‘பொறுத்திருந்து பாருங்கள்’ என்றும் அவர் பதிலளித்தார்.