ஒவ்வொரு வீட்டிலும் உணவுகளையும் காய்கறிகளையும் பாதுகாப்பாகவும் புதியதாகவும் வைத்துக்கொள்ள உதவும் மிக முக்கியமான சாதனமாக ரெஃப்ரிஜிரேட்டர் விளங்குகிறது. ஆனால் பல வீடுகளில் ஃப்ரிட்ஜைத் திறந்தாலே ஒருவிதக் கடுமையான துர்நாற்றம் வீசி மூக்கைப் பிடிக்கும் நிலை ஏற்படுவதைப் பார்த்திருப்போம்.

இந்தத் துர்நாற்றம் வெறும் அருவருப்பை மட்டும் தருவதில்லை, ஃப்ரிட்ஜிற்குள் இருக்கும் மற்ற நல்ல உணவுப் பொருட்களின் தரத்தையும் சுவையையும் கெடுத்து, ஆரோக்கியத்திற்கும் பெரிய அச்சுறுத்தலாக மாறுகிறது. ஃப்ரிட்ஜ் இப்படி துர்நாற்றம் வீசுவதற்கு வெளிப்புறக் காரணங்களை விட, நாம் அன்றாடம் அதை உபயோகிப்பதில் செய்யும் சில அலட்சியமான தவறுகளே முக்கியக் காரணமாக அமைகின்றன.

ஃப்ரிட்ஜில் உணவுகளைத் திறந்து வைப்பது, கெட்டுப்போன உணவுகள் மற்றும் அழுகிய காய்கறிகளை உடனுக்குடன் அகற்றாமல் பல நாட்கள் அப்படியே விட்டுவிடுவது போன்றவை இந்தத் துர்நாற்றத்திற்கு முதன்மை காரணங்களாகும்.

மேலும், ஃப்ரிட்ஜின் பின்பகுதியில் உள்ள வாட்டர் டிரேவை நீண்ட நாட்களாகச் சுத்தம் செய்யாமல் விடுவதால், அதில் தேங்கும் அழுக்கு நீர் பேக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளின் இருப்பிடமாக மாறி கடுமையான துர்நாற்றத்தை வீசத் தொடங்குகிறது.

ஃப்ரிட்ஜின் உட்புற ரப்பர் கேஸ்கெட்டுகளில் உணவுத் துகள்கள் சிந்துவதும், சரியான வெப்பநிலையைப் பராமரிக்கத் தவறுவதும் கூட பாக்டீரியாக்கள் வேகமாகப் பெருகி நாற்றம் அடிக்க வழிவகுக்கிறது. இந்த துர்நாற்றத்தில் இருந்து ஃப்ரிட்ஜை மீட்டு எப்போதும் புதியது போல வைத்திருக்கச் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதுமானது.

வாரம் ஒருமுறை ஃப்ரிட்ஜில் உள்ள தேவையற்ற, பழைய உணவுகளை அகற்றிவிட்டு, வெதுவெதுப்பான நீரில் சமையல் சோடா அல்லது எலுமிச்சை சாறு கலந்து உட்புறத் தட்டுகளைத் துடைத்துச் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு சிறிய கிண்ணத்தில் சமையல் சோடாவையோ அல்லது எலுமிச்சம்பழத்தைத் பாதியாக வெட்டியோ ஃப்ரிட்ஜின் ஒரு மூலையில் வைத்துவிட்டால், அது துர்நாற்றத்தை முழுமையாக உறிஞ்சிவிடும்.

இந்நிலையில் உணவுகளை எப்போதும் மூடி போட்டு வைப்பதும், ஃப்ரிட்ஜை சரியான இடைவெளியில் டீப் கிளீனிங் செய்வதும் உங்கள் ஃப்ரிட்ஜை துர்நாற்றமின்றி எப்போதும் கமகமவெனப் புதியதாக வைத்திருக்கும்.